களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி. 106-130

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்.... எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலம்

பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன் 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.

செயல்கள்


பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது, நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், "......இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்....." என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.

No comments: