ராஜ ராஜ சோழன்
(பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் கதை .....கல்கி எழுதியது .மின் நூல் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் clickhere to DOWNLOAD )
இந்தியர்கள் குப்தர்களையும், விஜயநகர அரசர்களைப் பற்றிக் கற்குமளவுக்கு ராஜ ராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ கற்பதில்லை. இந்தியாவின் பெருமையாக ஈரானின் கட்டட காலையில் உருவான தாஜ்மகாலை கூறிக்கொள்ளும் நாம் இந்தியாவிலே உருவான தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்களை பற்றி மறந்தும் பேசுவதில்லை.ராஜ ராஜ சோழனை பற்றி கேட்ட நாள் முதல் அவனை பற்றி ஆராய வேண்டும் என்ற சிந்தை இருந்தது.ஆதலால் ஆங்கங்கே கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இணையத்தில் தமிழில் தொகுத்து தந்துள்ளேன் .. முதல் முயற்சி பிழை இருப்பின் பொறுத்தருள்க
மிக பழமையானது சோழ ராஜ்யம். இதனை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகா கல்வெட்டிலும் கூட காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
சோழர்கள் காலத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்
1 சங்க கால சோழர்கள்
2 விஜயால சோழர்கள்
3 சாளுக்கிய சோழர்கள்
நாம் இங்கு காண இருப்பது விஜயால சோழர்களை பற்றி.. இவர்கள் காலத்தில்தான் சோழ சாம்ராஜ்யம் தன் கடற்படை வலிமை கொண்டு தெற்காசியா முழுவது பறந்து விரிந்திருந்தது. இந்திய வரலாற்றில் முதன் முதலாக கடல் கடந்து தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய ஒரு ராஜ்யம் சோழ ராஜ்யம் தன்.இவர்கள் தம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து மதத்தையும்,திராவிட கலாச்சாரத்தையும் பரப்பினர்.
போர்கள்
காந்தளூர்ச்சாலை கடிகை போர்
பட்டமேற்றவுடன் ராஜ ராஜன் செய்த முதல்காரியம் தனது தமையனார் ஆதித்த கரிகாலர் கொலையில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைக் கண்டுபிடித்து தண்டித்ததே ஆகும். சோமன் இவனது தம்பி ரவிதாசன், பரமேஸ்வரன், மலையுரன் மற்றும் இவர்களுக்கு பெண் கொடுதோர் பெண் எடுத்தோர் ஆகியோரை கட்டிய துணியோடு சோழ எல்லை தாண்டி சேர நாட்டுக்கு துரத்தி அடித்தான்.அந்தணர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை தரக் கூடாது என்று போதிக்கும் மனு தர்மத்துக்கு அடிபணிந்து அவர்களை உயிரோடு விட்டதாக கூறப்படுகிறது.
கேரளாவில் உள்ள காந்தளூர்ச்சாலை மீது போர் தொடுத்து பாஸ்கர ரவி வர்மனை தோற்கடித்தான்.காந்தளூர்சாலை கடிகை என்பது சேர,சோழ, பாண்டிய மன்னர்களிடையே புகழ்வாய்ந்த போர்முறைகளை, ஆயுதங்கள் பயிற்சியினை மற்றும் இன்னபிற தந்திரங்களை பயிற்றுவிக்கும் கல்லூரி போல திகழ்ந்து வந்தது.இங்கு தான் ஆதித்த கரிகாலனை கொல்ல சதி திட்டம் உருவானதாக கருதியதால் இக்கடிகை தகர்க்கப்பட்டது.
மலை நட்டு போர்
இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான்.இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.
ஈழப் போர்
பாண்டிய மணிமுடியை கைப்பற்றும் பொருட்டும் இலங்கையை முழுவதுமாக தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டும் ஈழப் போரை நடத்தினான். சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.இருப்பினும் இவனால் பாண்டிய மணிமுடியை கைப்பற்ற முடியவில்லை.இராஜேந்திர சோழன் காலத்திலயே மணிமுடியும் இலங்கையின் முழு கட்டுப்படும் சோழர் கைக்கு வந்தது.
வடக்கு போர்கள்
முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஷ்டிரகூடரின் இல்லாததால் இப்போர் மிக சுலபமாக வெற்றி அடைந்தது . அடுத்த நூற்றாண்டு முழுதும் இந்த பகுதி சோழர் வசமே இருந்தது.
மேலைச் சாளுக்கிய போர்
காங்கபடியையும் நுலம்பாடியையும் கைப்பற்றியவுடன் சோழர்களுக்கும் சாளுக்கியகளுக்கும் அடிக்கடி சிறு சிறு மோதல் ஏற்பட்டது . இருவரும் தக்க சமயத்தை எதிர்பார்த்து இருந்தனர் தங்களது பலத்தை நிருபிப்பதற்கு.எந்த சம்பவம் படையெடுப்பை தூண்டியது என்பது தெளிவாக தெரியவில்லை .கல்வெட்டுபடி கி.பி 1007 ல் இராஜராஜன் தலைமையில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் கொண்ட சோழ படை சாளுக்கியத்தை துவசம் செய்ததுடன் மிகப்பெரும் அழிவையும் ஏற்படுத்தி சென்றது.இப்போரில் சத்தியாசிரயனை வெற்றி கொண்டு அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் கொணர்ந்து பெரிய கோவில் கட்டுவதற்கு செலவழித்தான் இராஜராஜன்.
வேங்கிப் போர்
இராஜராஜன் கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடன் ஓர் இராணுவ உடன்படிக்கை செய்துகொண்டான். ஆனால் இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்த்த ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.
கலிங்க போர்
வேங்கிப் போர் முடிந்தவுடன் கலிங்கத்தின் (கலிங்கம் இன்றைய ஒரிசாவின் பகுதி) மீது படையெடுத்தான்.இராஜராஜன் தலைமையில் சென்ற படை கலிங்க அரசன் பீமனை முறியடித்து
மாலத்தீவு போர்
இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை.
சோழ சாம்ராஜ்யம்
மதுரை
கங்கபாடி நுளம்பபாடி (தற்போதய மைசூர்)
கலிங்கா
வெங்கி
மாலத்தீவு
கடாரம் (தற்போதிய மலேசியாவில் உள்ள ஒரு தீவு )
மலாயா ( தற்போதிய தாய்லாந்து, பிலிபீன்ஸ், இந்தோனேசிய, மலேசியா, ப்ருனாய் மற்றும் சிங்கபூர் )
இலங்கை
தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் சோழர்களால் கட்டப்பட்ட பழங்கால இந்து ஆலயம்
நிர்வாகம்
இராணுவம்
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின.
இவன் வலிமை மிக்க
காலால் படை
குதிரைப்படை
யானைப்படை (குஞ்சரமல்லர்)
கடற்படை
வில்லேந்திய வீரர்கள் ( வில் படை )
ஆகிய நான்கையும் கொண்டிருந்தான்.இவற்றின் எண்ணிக்கை தெளிவர தெரியவில்லை. காலால் படையில் ஏறக்குறைய பதினோரு லட்சம் பெரும் , யானைப்படையில் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் இருந்ததாக சீன குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது.இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது
தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் அரசு இயந்திரங்கள் சரிவர இயங்க ஆளுநர்களையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தார்.அதேவேளை ஒவ்வொரு நாட்டிலும் அமைதி காக்கும் படை ஒன்றையும் விட்டுச் சென்றார். ஈழத்தில் அவர் விட்டு வைத்திருந்த வேளைக்காரர் படையின் எண்ணிக்கை 90,000 என்று தெரிகிறது. இப்படி ஒரு மாபெரும் சோழப்பேரரசை நிறுவ அவர் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை பதினொரு லட்சத்திற்கும் மேலென்று கணக்கிட்டிருக்கிறார்கள். 31 படை பிரிவுகள் கொண்ட இத்தகைய அளவிலான சேனையைப் பராமரிப்பதற்கும், நிருவகித்து பயன்படுத்துவதற்கும் அசாத்திய திறமையும் நிருவாகத்திட்டமிடல் அறிவும் இருந்திருக்க வேண்டும்
நிலசீர்திருத்தம்
ராஜராஜன் தனது 16 வது ஆட்சி ஆண்டில் உலகின் வேறு எந்தப் பகுதியிலும், எந்த அரசனும் செய்யாத அளவில் அவருடைய பேரரசு முழுவதையுமே அளந்துள்ளார். பயிர் செய்யக்கூடியதும் முடியாததுமான எல்லா நிலங்களையும் அளந்து, வகைப்படுத்து கணக்கிட்டுத் தீர்வையும் நிர்ணயித்தது ஒரு மாபெரும் சாதனை. இக்கால நவீன அளவீட்டுக் கருவிகள் ஏதுமில்லாஅத நிலையில் வெறும் கயிறுகளைக் கொண்டு அளந்து ஓலைச்சுவடிகளில் குறித்துக்கொண்டு கணக்கிடுவது என்பது ஓர் அசுர சாதனை. அதுவும் மிகவும் துல்லியமாக (ஒரு வேலியின் 32ல் ஒரு பகுதியைக்கூட அளந்தார்கள்) அளவை செய்வது என்பது உலகையே அளப்பதற்கு ஒப்பாகும். இதனால் இவருக்கு “குரவன் உலகளந்தான்” என்றும் ஒரு பெயர் வந்தது.
சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது.10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்..
கிராமசபை
இராஜராஜனுடைய சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலிஎனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம்பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில்தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டுஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில்உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல்என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும்ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள்,ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன்வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள்என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.
பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம்என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.
சமூகம்
ராஜராஜனின் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.
பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர்.
தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.
ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.
அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.
சமயம்
ராஜராஜனின் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.
தஞ்சை கோவில்
தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் அல்லது விமானம் ஒரே கல்லால் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது.(ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.) பக்கத்தில் மலையோ அல்லது பெரிய பாறையோ இல்லாத இடத்தில் எவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது என்பது இன்னும் மர்மம் தான்.கோவிலை சுற்றிலும் சாய்வான மணல் மேடுகளை அமைத்து யானைகளின் மூலம் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.பாலகுமாரன் எழுதிய உடையார் புதினத்தில் இதை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது
தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன்மா தேவியார்! பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் ராஜராஜசோழன்!
வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை அர்க்கிடேக்டோடுகள்! கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்ற கூற்று பொய் .கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது
கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )
சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.
THANKS TO http://www.ponniyinselvan.in/
http://thalaivanankatamilan.blogspot.com/2008/07/blog-post_876.html
http://www.thebigtemple.com/
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கோபுரத்தில் உள்ள அந்த செப்புக்கலசத்தின் நிழல் தரையில் விழாது அதுதான் உண்மை நானும் பலமுறை கண்டது
Post a Comment